‘இதுக்கெல்லாம் அஞ்சக்கூடாது’... ‘பிகில்’ ஸ்பெஷல் ஷோ சர்ச்சை... சீமான் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 24, 2019 11:54 AM
‘பிகில்‘ திரைப்படம் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளநிலையில், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதுதொடர்பாக சீமான், தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் 'பிகில்'. தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும், வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு, பதிலளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, பிகில் உள்பட எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு வன்மம் வைத்துக் கொண்டுதான் அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசியதற்கு, மாறான கருத்துக்களை பலரும் தெரிவித்துவிட்டனர். அதன்பிறகும், பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்மையை கொடுக்காது.
இத்தகைய செயல்களால், இளம் தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகும். செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்லும் விஷயங்கள், சமூகத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், அதிகாரத்தில் இருப்பவர்கள், அவர்களுக்கு எதிராக கூறுகின்றனர். மேலும் அச்சுறுத்திப் பார்க்கின்றனர். நடிகர் விஜய், இதுபோன்ற செயலுக்கெல்லாம் அஞ்சக்கூடாது. விஜய்க்கு இன்று மட்டுமல்ல, என்றும் உறுதியாக துணை நிற்பேன்’ என்று கூறியுள்ளார்.