‘இதே போன்று தான்’.. ‘கடந்த 10 வருடங்களாக..’!.. ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து சீமான் கருத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் எனக் கூறியிருந்தேன். நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பல விதமாக வந்தன. எனது அரசியல் பிரவேசம் குறித்தும் பலவிதமான தகவல்கள் வெளிவந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே உங்களை சந்தித்து இருக்கிறேன்.
நான் 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக சொன்னதாக சொல்வது தவறு. 2017ம் ஆண்டுக்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்தான் சிஸ்டம் சரியில்லை என கூறினேன். அரசியல் திட்டத்துக்கு மூன்று திட்டங்களை வைத்துள்ளேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும். புதியவர்கள் சட்டமன்றத்துக்கு செல்ல நான் பாலமாக இருப்பேன்.
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது எனது முடிவு. முதலமைச்சர் பதவியை நான் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சி தலைமையை மட்டுமே கவனிப்பேன். படித்தவர்கள் சிந்தனையாளர்கள், தன்மானம் உள்ளவர்களை முதல்வராக அமர வைப்போம். முதல்வர் பதவியில் நாங்கள் அமர வைக்கும் தலைவர், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அவரை தூக்கி எறிவோம். முதலமைச்சர் பதவியை நான் வேண்டாம் எனக் கூறியதை யாரும் ஏற்கவில்லை. நிர்வாகிகள் பலர் இதை ஏற்காததையே நான் ஏமாற்றம் என கூறினேன் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். இதே போன்று தான் அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம், அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்’ என பதிவிட்டுள்ளார்.
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
— சீமான் (@SeemanOfficial) March 12, 2020
