'சார் கார்டு மேலே இருக்க 16 நம்பர் சொல்லு சார்'... 'அதைவிட பயங்கரம்' ... புதுசா கிளம்பியிருக்கும் 'வாட்ஸ்அப்' மோசடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 16, 2020 04:15 PM

நாங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம் என, ''சார் கார்டு மேலே இருக்க 16 நம்பர் சொல்லு சார்'' என்ற இந்த குரலைத் தமிழ்நாட்டில் கேட்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, இந்த கும்பலின் அட்டகாசம் அதிகம். ஆனால் அவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு புதுசாக கிளம்பியிருக்கிறது ஒரு கும்பல். அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

Corona Lockdown : WhatsApp verification scam has been increased

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் பெரும்பாலானோர் டிவி மற்றும் சமூகவலைத்தளங்களில் தங்களின் நேரங்களைச் செலவிட்டு வருகிறார்கள். இந்தச்சூழ்நிலையில்  வாட்ஸ்அப் பயன்பாடு வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளதால், அதனைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி அரங்கேறி வருகிறது. 

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம், என அழைக்கப்படும் இந்த மோசடியிலிருந்து எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்து, வாட்ஸப் நிறுவனம் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்குவதற்கு, ஒன் டைம் பாஸ்வேர்ட் (one time password) எனப்படும் ஓ.டி.பி (OTP) எண் கட்டாய தேவையாக தற்போது உள்ளது. அதனைப் பயன்படுத்தி யாரோ ஒரு மர்மநபர், ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார், அதில் ஒரு ஓடிபி தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த ஓ.டி.பி இருந்தால் தான் என்னுடைய வாட்ஸ்அப் கணக்கிற்குள் செல்ல முடியும் என, அந்த 6 இலக்க ஓ.டி.பி எண்ணை தனக்கு அனுப்புமாறு சொல்வார்.  நாமும் வேறு ஏதோ எண் தானே என நினைத்து அந்த எண்ணை அந்த நபருக்கு அனுப்பினால், உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும். அதன்பின்பு உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கிற்கு யார் என்ன குறுஞ்செய்தி, அல்லது புகைப்படங்கள் அனுப்பினாலும், அதை நீங்கள் பார்ப்பது போல நேரடியாக அவராலும் பார்க்க முடியும்.

மேலும் அந்த நபரால் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு மூலம், தவறான செய்தி, ஆபாச புகைப்படங்கள் அல்லது வீடியோகளை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். இதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்கள் எல்லாம், யாரோ ஒரு 3வது நபர் கண்காணித்துக் கொண்டே இருப்பார்.

எனவே  உங்களுக்கு ஏதாவது ஓ.டி.பி எண் வந்து அதை எனக்குப் பகிருங்கள் என குறுஞ்செய்தி வந்தால், தயவு செய்து அதனைச் செய்யாதீர்கள். மேலும் வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம்-ல் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்களுடைய வாட்ஸப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) ஆப்ஷனை எனேபுள் (enable) செய்துகொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது