‘எங்கள் இதயம் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது’... ‘இந்தியப் பெண் மருத்துவருக்காக’... 'உருக வைக்கும் பதிவை வெளியிடும் இங்கிலாந்து மக்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்புகழ்பெற்ற இந்தியப் பெண் மருத்துவ நிபுணர், இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலி ஆனதை அடுத்து, அங்கு வாழும் மக்கள் அவருக்காக உருக்கமான பதிவை வெளியிட்டு வருகின்றனர்.
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் பூர்ணிமா நாயர். இவர், இங்கிலாந்து நாட்டில் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்தார். புகழ்பெற்ற மருத்துவரான இவரையும், கொரோனா விட்டு வைக்காமல் அந்த வைரஸ் தாக்குதலுக்கு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி உள்ளானார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவரை காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும், முடியாமல் போனது.
இதனால் அந்நாட்டு மக்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து மருத்துவமனை வளாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எங்களின் மதிப்புமிக்க தோழியான பூர்ணிமா நாயர் கொரோனாவிற்குப் பலியாகிவிட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் கொரோனாவை தனது முழு பலம் கொண்டு எதிர்த்தார். அவரின் இறப்புச் செய்தி எங்கள் இதயைத்தை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய எங்களுடன் சேர்ந்து நங்களும் பிரார்த்தனை செய்வீர்கள் என்று நம்புகிறோம்’ என கூறியுள்ளது.
மருத்துவமனை வளாகம் மட்டுமில்லாது பூர்ணிமாவிடம் சிகிச்சை பெற்று வந்த பலரும் உருக்கமான பதிவுகளை வெளிட்டு வருகின்றனர். அதில், டாக்டர் பூர்ணிமா நாயர், மரணத்தில் இருந்து தனது தாயாரை காப்பாற்றியதை நினைவுகூர்ந்து ஒரு பெண் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “டாக்டர் பூர்ணிமா நாயரின் ஆன்மா சாந்தி அடைவதாக. அவர் கண்டறியப்படாததும், உயிருக்கு ஆபத்தானதுமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயாரின் உயிரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் காப்பாற்றினார். அவருக்கு எங்கள் குடும்பம் என்றும் கடமைப்பட்டிருக்கும். அவரது வாழ்வு இவ்வளவு குறுகியகாலத்தில் முடிந்தது எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டது” என கூறி உள்ளார்.
இதேபோல் பிஷப் ஆக்லாந்து எம்.பி. டெஹென்னா டேவிசன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் பூர்ணிமா நாயர், எங்கள் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர். மதிப்புமிக்க உறுப்பினர். அவரை அறிந்த அனைவரும் இனி அவரை பார்க்க முடியாமல் போனதற்காக மிகவும் வருந்துவோம். இந்த துயரமான தருணத்தில் என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர்கள் அனைவருடனும் இணைந்து இருக்கின்றன” என கூறி உள்ளார்.