'மனிதர்களை' விட்டு போகாது... இரண்டாம் அலை 'அச்சத்திற்கு' இடையே... உலக சுகாதார அமைப்பு 'கவலையுடன்' புதிய எச்சரிக்கை...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் மனிதர்களுடனேயே நீண்ட காலம் இருக்கலாம் எனவும், எப்போதும் அழியாமலேயே போகலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊரடங்கால் உலக பொருளாதாரமும் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து ஊரடங்கை தளர்த்தி பொருளாதார நிலையை மேம்படுத்தவும், இரண்டாவது அலை ஏற்படாமல் தடுக்கவும் உலக நாடுகள் போராடி வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு முடிவுக்கு வராது என்றே வல்லுநர்கள் பலரின் கணிப்பும் உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட நிர்வாக இயக்குநர் மைக் ரயான், "கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்து இல்லாமல் உலக மக்களுக்கு போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம். ஒருவேளை கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படும். தடுப்பு மருந்தை போதுமான அளவு உற்பத்தி செய்யவும், உலகம் முழுவதும் விநியோகிக்கவும் தீவிர முயற்சி எடுக்க வேண்டி இருக்கும்.
அதனால் நீண்ட காலம் இந்த வைரஸ் மனிதர்களுடனேயே இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பரவும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாகவும் கொரோனா வைரஸ் மாறலாம். அத்துடன் இந்த வைரஸ் எப்போதுமே அழியாமலும் போகலாம். எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை என்றாலும் அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நாம் கண்டறிந்துள்ளோம். கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பது கடினமாகவே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
