'நாங்க எவ்வளவோ சொன்னோம்'... 'சென்னையில கொரோனா எகிற இவங்க தான் முக்கிய காரணம்'... முதல்வர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 14, 2020 10:17 AM

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க முக்கிய காரணம், கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அரசுக்கு ஒத்துழைக்காமலிருந்தது தான் என முதல்வர் கூறியுள்ளார்.

CM Palaniswami blamed traders for the expanding Koyambedu cluster

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்களிடம் பேசிய முதல்வர், ''சென்னை மாநகரம் அதிக மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இது கொரோனா பரவ மிக முக்கிய காரணமாகும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 26 லட்சம் பேர் குடிசைப் பகுதியிலே வசித்து வருகின்றார்கள். மேலும் நெருக்கமான தெருக்கள், மற்றும் குறுகிய தெருக்களில் மக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்று எளிதாகப் பரவி விடுகிறது.

மிக முக்கியமாக கோயம்பேடு அங்காடி ஆசியாவிலேயே மிகப்பெரிய அங்காடியாகும். அங்கு  3941 கடைகள் இருக்கும் நிலையில், சுமார் 20,000 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள். இதனால் இங்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்படும் என்பதால், 19.3.2020 அன்று சிஎம்டிஏ அதிகாரிகள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் அரசு சார்பில் தற்காலிகமாக அமைக்கக்கூடிய பகுதியிலே சென்று காய்கறி விற்பனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நாங்கள் இங்கேதான் வியாபாரம் செய்ய முடியும். வேறு பகுதிக்குச் சென்று விற்பனை செய்தால் எங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும் என அச்சப்பட்டார்கள். தொடர்ந்து அரசு பலமுறை அவர்களிடம் பேசியும் என்ற முன்னேற்றமும் ஏற்படவில்லை. கோயம்பேட்டில் தொற்று ஏற்பட்டால் அது பலருக்குப் பரவும், இதனால் மொத்த கடைகளையும் மூடும் நிலைக்குத் தள்ளப்படுவோம், என அரசு கூறியும் கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வேறு இடத்திற்குச் செல்ல ஒத்துக்கொள்ளவில்லை.

இதன் எதிரொலியாக இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து அதிகமான பேர் வெளிவட்டத்திற்குச் சென்ற காரணத்தினாலே, அந்த மாவட்டங்களிலே நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. சென்னையிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்குக் காரணம் இதுதான். அரசைப் பொறுத்தவரைக்கும் இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என, பல ஊடகங்களில், செய்திகளிலும் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். அது உண்மைக்குப் புறம்பானது

கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக அரசு அமைத்த தற்காலிக  காய்கறி அங்காடிக்கு செல்ல மறுத்தார்கள், இதுதான் உண்மை நிலை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன்” என முதல்வர் பேசியுள்ளார்.