'பசங்களை வச்சு,'டியூசன் மாஸ்டர்' பண்ணுற வேலையா இது'...பொறியில் சிக்கிய மாஸ்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Apr 03, 2019 01:22 PM
பள்ளி மாணவர்கள் வந்து செல்லும் விலை உயர்ந்த சைக்கிள்களை,திருடி விற்ற டியூசன் மாஸ்டர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் அடிக்கடி விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போவது தொடர் கதையாக இருந்து வந்தது.யார் அதனை திருடி செல்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது.வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்கள், பள்ளி மாணவர்கள் டியூசன் செல்லும்போது அங்கு நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள் என விலை உயர்ந்த சைக்கிள்கள் தொடர்ந்து காணாமல் போனது.விலை உயர்ந்த சைக்கிள்கள் மட்டும் காணாமல் போனதால்,யாரோ மர்ம நபர்கள் விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து திருடுவது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சைக்கிள்கள் காணாமல் போன பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.அப்போது சில நபர்கள் சைக்கிள்களை,ஏதோ தங்களின் சொந்த சைக்கிள் போல திருடி செல்வது தெளிவாக தெரிந்தது. அதன் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் நேற்று கோட்டாம்பட்டி பகுதியில் சைக்கிளுடன் சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது பிடிபட்ட நபர் பார்த்திபன் என்றும் அவர் அந்த பகுதியில் டியூஷன் நடத்தி வருவதும் தெரிய வந்தது.இவர் தான் டியூசனுக்கு வரும் சில மாணவர்களிடம் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி வர சொன்னதும்,அவ்வாறு திருடப்படும் சைக்கிள்களை அவரது நண்பர் லோகுராஜ் என்பவரிடம் அதனை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்த காவல்துறையினர்,பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த 30க்கும் மேற்பட்ட சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.இதனிடையே மாணவர்களை வைத்தே டியூசன் மாஸ்டர் சைக்கிள்களை திருடிய சம்பவம்,அந்த பகுதியில் உள்ள பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.