காதலுக்கு கடும் எதிர்ப்பு... 'திருமணத்துக்கு' முன் வீட்டைவிட்டு சென்று... காதல் ஜோடி எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 15, 2020 02:50 PM

தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டைவிட்டு சென்று காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Lovers Suicide in Harangi Dam on Valentines Day, Police Investigate

மைசூர் மாவட்டம் யமகும்பா பகுதியை சேர்ந்தவர் சிந்துஸ்ரீ(19). அதே பகுதியை சேர்ந்த சச்சின்(25) என்னும் வாலிபரும், சிந்துஸ்ரீயும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அவசர, அவசரமாக சிந்துவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். இன்று (15.2.19) சிந்துவிற்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையில் சச்சினை தொடர்பு கொண்டு பேசிய சிந்து வீட்டைவிட்டு வெளியேறினார். சச்சின், சிந்து இருவரும் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு சென்று மகிழ்ச்சியாக அந்த இடத்தை சுற்றிப்பார்த்து உள்ளனர்.

காதலர் தினமான நேற்று மகிழ்ச்சியாக இருந்த அந்த ஜோடி வாழ்வில் தான் ஒன்று சேரவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என முடிவெடுத்து அங்குள்ள நீர்த்தேக்க பகுதியில் ஜோடியாக குதித்து விட்டனர். இதைக்கண்ட அதிர்ந்து போன மக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் நீர்த்தேக்கத்தில் சுமார் 1 மணி நேரம் தேடி இருவரது உடல்களையும் மீட்டனர். பின்னர் இதுகுறித்து இருவரது வீட்டாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இருவரது பெற்றோரும் வந்து சச்சின், சிந்து உடல்களை பார்த்து கதறியழுதனர்.

தொடர்ந்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காதலர் தினத்தை உலகமே கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.