'இங்க இனிமே இருந்தா செத்து தான் போவோம்' ... 'கல்லு தான் சாப்பிடணும் இங்க' ... டெல்லியை விட்டு வெளியேறும் கூலி தொழிலாளர்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 26, 2020 03:07 PM

நகரத்தை விட்டு வெளியேறாவிட்டால் நாங்கள் பசியால் இறந்து விடுவோம் என டெல்லியில் வேலை செய்து வரும் உத்தரப்பிரதேச கூலி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Labourers in New Delhi leave the town due to food scarcity

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக் டவுன் மூலம் நாடு முழுவதுமுள்ள அடித்தட்டு மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களின் வாழ்வாதார தேவையை நிவர்த்தி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

டெல்லி மாநிலத்திலுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அளிக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். மேலும் வீடு இல்லாமல் தவிப்போருக்கான முகாமை அதிகரிக்கும் பணியிலும் டெல்லி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கூலி தொழில் செய்து வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். இதுகுறித்து பெண் ஒருவர் கூறும்போது. 'இங்கு எங்களுக்கு வேலையும் இல்லை. எங்களிடம் பணமும் இல்லை. இங்கேயே இருந்து சாப்பாட்டிற்கு நாங்கள் என்ன செய்வது. இங்கிருந்து வெளியேறாவிட்டால் நாங்கள் இறந்து போய் விடுவோம்' என்கிறார்.

மேலும் ஒருவர் தன் மூன்று குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோருடன் 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது கிராமத்திற்கு டெல்லியிலிருந்து நடந்து செல்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'டெல்லியில் இருந்து நாங்கள் கற்களையா சாப்பிட முடியும் ? இங்கு எங்களுக்கு உதவ யாருமில்லை. அதனால் எங்களது கிராமத்திற்கு நடந்து செல்ல முடிவெடுத்தோம்' என தெரிவித்துள்ளார். இவர் தனது கிராமத்திற்கு நடந்து செல்ல குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப்படும்.

Tags : #NEW DELHI #LOCKDOWN #INDIA