ஒரே நாளில் 28 பேருக்கு பாதிப்பு ... லாக் டவுன் ஆன கேரளா ... கட்டுப்பாடுகள் குறித்து பேசிய கேரள முதல்வர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 24, 2020 12:18 PM

கேரள மாநிலத்தில் ஒரு நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

28 people affected due to Corona Virus in Kerala

இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 28 பேரில் 19 பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதனால் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கேரளா முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 'மற்ற மாவட்டங்களை விட காசர்கோடு மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடினால் கைது செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படுவர். மேலும் வரும் 31 ம் தேதி வரை மாநில எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் காலை 7 மணி வரை மாலை 5 மணி வரை திறந்திருக்கும். காசர்கோடு பகுதியில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தனி கண்காணிப்பில் உள்ளவர்கள் குறித்த தகவல் அந்த பகுதி வாசிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் யாரவது வீட்டை விட்டு வெளியேறினால் தகவல் கூறலாம்' என தெரிவித்துள்ளார்.

Tags : #KERALA #LOCKDOWN #PINARAYI VIJAYAN