darbar USA others

கடிதம் எழுதி வைத்துவிட்டு... ப்ளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு... உறைந்துப் போன தோழிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 13, 2020 12:01 PM

தென்காசி அருகே அரசு மாணவியர் விடுதியில், தங்கிப் படித்து வந்த பிளஸ்-1 மாணவி ஒருவர், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Govt school girl committed suicide due to studies

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பாத்திர வியாபாரியான கனகராஜ். இவரது மகள் தங்கப்பிரியா (16), குருவிகுளம் அருகே உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி தங்கப்பிரியா நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காணப்பட்டுள்ளார்.

இதனைப் பார்த்து தோழிகள் அதிர்ந்து போயினர். இதையடுத்து விடுதி காப்பாளருக்கு சக மாணவிகள் தகவல் தெரிவிக்க அவர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு மாணவி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், ‘எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மாணவி சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு மாணவியிடம் கூறியுள்ளனர். பின்னர் மாணவி தங்கப்பிரியா பெற்றோரை அழைத்து வந்துள்ளார்.

அப்போது பெற்றோர், சரியாக படிக்காததால் மாணவியை கண்டித்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த தங்கப்பிரியா, கடந்த 2 நாட்களாக தோழிகள் யாருடனும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தங்கப்பிரியா விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்ததை அறிந்த பெற்றோர் கதறித் துடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SCHOOLSTUDENT #தற்கொலை #மாணவி #அரசுப் பள்ளி