காரில் சாய்ஞ்சு நின்னதுக்காக சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. இன்னைக்கி அதே சிறுவனை 'FOREIGN' காரில் ஏற்றி அழகு பார்த்த தொழிலதிபர்
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம், கண்ணூர் பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் காரில் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில், சாலை ஓரத்தில் அந்த காரை சிறிது நேரம் நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது, அந்த காரின் மீது சுமார் 6 வயது சிறுவன் ஒருவன் சாய்ந்து நின்றதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டதும் கார் உரிமையாளர், கோபத்தில் அந்த சிறுவனிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுவன் அதிர்ச்சியில் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி கடும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை ஆவேசமாகவும் பலர் தெரிவித்து வந்தனர். காரை ஓட்டி வந்த இளைஞரின் செயல், பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் காரில் சாய்ந்ததற்காக சிறுவனிடம் அதன் உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்ட சம்பவத்தை நினைத்து அதிகம் ஏங்கிய நபர் ஒருவர் தற்போது செய்துள்ள காரியம், இணையத்தில் பல்வேறு பல தரப்பிலான மக்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளது. கோட்டயம் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான டோனி வர்கிச்சன் என்பவர் அந்த சிறுவனை நினைத்து அதிகம் வருத்தம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சிறுவனுக்கு அப்படி ஒரு சம்பவம் இருந்ததை அறிந்து ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்த டோனி, கோட்டயத்தில் இருந்து கண்ணூர் வந்து அந்த சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுவன் கணேஷ் மற்றும் அவரது பெற்றோர்களை சந்தித்ததுடன் தனது விலை உயர்ந்த வெளிநாட்டு காரில் ஏற்றி கோழிக்கோடு வரை அழைத்து சென்றுள்ளார் டோனி. அத்துடன் அவர்களை பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்று அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் செய்த டோனி, இறுதியில் துணிமணிகளை வாங்கி கொடுத்து வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.
இது பற்றி டோனி கூறுகையில், ஏழை என்ற காரணத்தினால் தான் இந்த கதி நேர்ந்தது என சிறுவனுக்கு ஒருபோதும் தோன்றி விடக்கூடாது என்றும், ஒருவர் செய்த தவறுக்காக சமூகத்தின் மீது அந்த சிறுவனுக்கு வெறுப்பு வரக்கூடாது என்று தான் இதனை நான் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல இன்னும் அந்த ஏழை குடும்பத்திற்காக தன்னாலான உதவிகளை செய்வேன் என்றும் டோனி கூறி உள்ளார்.
காரில் சாய்ந்து நின்றதால் சிறுவனுக்கு நடந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது அந்த சிறுவனை வெளிநாட்டு காரில் ஏற்றி தொழிலதிபர் அழகு பார்த்துள்ள விஷயம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
Also Read | வருங்கால மனைவின்னு நம்பி பேசிய வாலிபர்.. 4 மாசம் கழிச்சு காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமா 21 லட்சம் அபேஸ்?!