SIVAN KUTTY : “பாடி ஷேமிங் ஒரு கேவலமான செயல்!..”.. பள்ளி பாடத்தில் விழிப்புணர்வை கொண்டுவரும் கேரள அரசு? கவனம் பெற்ற அமைச்சரின் கருத்து.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள கல்வித்துறை அமைச்சர் உருவ கேலி குறித்த முக்கிய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
முந்தைய காலங்களைப் போல் அல்லாமல் தற்காலங்களில் உருவ கேலி குறித்த விழிப்புணர்வும், அதற்கு எதிரான எதிர்ப்பும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகப் பிரபலங்கள் பலரிடையே உருவாகி இருக்கிறது. அதன்படி திரைப்படங்களோ, நகைச்சுவை வசனங்களோ, மீம்ஸ்களோ, இணையதள கமெண்ட்களோ உள்ளிட்ட எதுவாயினும் சரி உருவகேலி என்பது மனிதர்களின் மனதை புண்படுத்தக்கூடிய செயல் என்பதை பலரும் வலுவாக தெரிவித்தபடி உள்ளனர்.
இந்த நிலையில் உருவக் கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி எடுத்துள்ள முடிவு பலரிடையே பாராட்டை பெற்று வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள் படிக்கக்கூடிய அந்த பாடத் திட்டத்திலேயே உருவக் கேலிக்கு எதிரான விழிப்புணர்வு பாடங்களை இணைப்பது குறித்து கேரள மாநில அரசு பரிசீலிக்க உள்ளதாக கேரள மாநில கல்வி துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், “உங்களுடைய தொப்பை அளவை குறையுங்கள்..” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு சிவன் குட்டி பதில் அளித்து இருந்தார். அதில் , “உருவ கேலி என்பது மிக கேவலமான ஒரு செயல்.. அதற்கு என்ன விளக்கம் அளித்தாலும் கூட, உருவகேலி என்பது ஏற்க முடியாத ஒன்று. சிலரால் தொடரப்படும் உருவ கேலி என்பது நம்மில் பலரை பாதிப்புக்குள்ளாக்குகிறது” என்று பதில் அளித்து இருந்தார்.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவன் குட்டி, “மனிதர்கள் ஒருவர் மீதான உருவ கேலியை கண்டிப்பாக நாம் நிறுத்த வேண்டும். நவீன மனிதர்களாகிய நாம் பரிணாமம் அடைந்து கொண்டிருக்கிறோம். நாம் அதை கற்றுக்கொள்ள வேண்டும். உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளி பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்து கேரளா மாநில அரசு ஆலோசிக்கும். ஆசிரியர் திறன் பயிற்சி வகுப்பிலேயே இது போன்ற கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதும் அவற்றை எதிர்கொள்வதும் குறித்த கற்பிதங்கள் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு இதுகுறித்த கற்றல் மற்றும் விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் அதில் அறிவுறுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் சக மாணவ- மாணவிகளால் உருவ கேலிக்கு உள்ளாகும் குறிப்பிட்ட மாணவர்களிடமும் அவருடைய பெற்றோரிடமும் இதை குறித்து பேசி போவதாக தெரிவித்த அமைச்சர், அவர்கள் இந்த விவகாரங்களில் தன்னம்பிக்கையுடன் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பேசியவர், “ஒரு மனிதனின் நிறமோ அவரிடம் இருக்கும் ஆடம்பரமோ முக்கியமில்லை. அவருடைய குணம்தான் முக்கியம். அவருக்கான தனித்துவத்தை அந்த குணமே பெற்று தரும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது கேரளாவில் சிவன் குட்டியின் இந்த பேச்சும் பள்ளி பாடத்திட்டத்தில் உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பான அவருடைய முன்னெடுப்பும் பரவலாக கவனம் பெற்று வருகிறது.
Also Read | "சாரா கூட டேட்டிங்கா?".. முதல் முறையா கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சொன்ன பதில்.. வைரல் பின்னணி!!