மறதி நோய்.. 16 வருஷமா சொந்த வீடு தெரியாம சுற்றித் திரிந்த முன்னாள் ராணுவ வீரர்.. கடைசியில் நடந்த அதிசயம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் மறதி நோயினால் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ பணியாளர் ஒருவர் 16 வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பாவுக்கார பகுதியை சேர்ந்தவர் ஏஜி. சசீந்திரன். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. ராணுவத்தில் பணிபுரிந்துவந்த இவருக்கு மூன்று சகோதரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்வதற்காக கஷ்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார் சசீந்திரன். நினைத்தபடியே தனது தங்கைகளுக்கு திருமணம் செய்துவைத்த அவர் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்.
ராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்திருக்கிறார் சசீந்திரன். இதனிடையே அவருக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்பட்டிருக்கிறது. இதனால் திடீரென ஒருநாள் சசீந்திரன் காணாமல் போயுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது சகோதரிகள் மிகுந்த துயரத்தில் இருந்தனர். கடந்த 16 ஆண்டுகளாக தேடியும் அவர்களால் சசீந்திரனை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது.
இந்நிலையில் தான், DPDO எனப்படும் பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்தவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் அலுவலக அதிகாரிகள் சசீந்திரனை தேடிச் சென்றிருக்கின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகிய அவருக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 21 லட்சம் ரூபாய் பணம் நிலுவையில் இருந்திருக்கிறது. அதை வழங்க, அதிகாரிகள் தேடும்போது கோட்டயம் அருகே உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சசீந்திரன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சசீந்திரனுக்கு ஆதரவு அளித்துவந்த அந்த விடுதியின் காப்பாளர் அவரிடம் இருந்த பழைய ஐடியை கண்டுபிடித்திருக்கிறார். அதன்மூலம் DPDO அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்திருக்கிறார். இருப்பினும், சசீந்திரனிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை ஒப்படைக்க முடியாமல் போயிருக்கிறது. இதனிடையே அங்கிருந்தும் சசீந்திரன் காணாமல் போயிருக்கிறார். இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு அவரது சகோதரியான விலாசினியிடம் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சசீந்திரனுக்கு சேரவேண்டிய பணமும் அவருக்கு கிடைத்திருக்கிறது. 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்துள்ள சசீந்திரன் இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.