'தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு புதிய பதவி'...மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Dec 06, 2019 03:06 PM
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக ஓய்வுபெற்ற தமிழக போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக பொறுப்பு வகித்தவர் விஜயகுமார். அப்போது சென்னையில் ரவுடிகளை ஒழிப்பதிலும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதிலும் சிறப்பாக செயல்பட்டார். பிரபல ரௌடிகள் பலர் காவல்துறை என்கவுன்டரில் சுட்டு கொல்லபட்டார்கள். தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சவாலாக இருந்து வந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு படைக்கும் விஜயகுமார் தலைமை தாங்கி வழிநடத்தினார். அப்போது தான் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய பணிக்கு சென்ற அவர், தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர், மத்திய காவல் படையின் இயக்குனர் போன்ற பதவிகளை வகித்து ஓய்வு பெற்றார். இதையடுத்து மத்திய உள்துறையில் ஆசோசகராக நியமிக்கப்பட்ட அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்ட போது அம்மாநில ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே அந்த பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்காகவே விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.