'ஸ்மார்ட் போனிலிருந்து குளியலறை வரை'... கணக்கெடுப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கேள்விகள்... ஏப்ரல் 1 தொடக்கம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Issac | Jan 10, 2020 11:24 AM
நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள வீடுகள் கணக்கெடுப்பின்போது, டிவி, கார், லேப்டாப், செல்போன் உட்பட 31 கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளனர். நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி இந்தாண்டு செப்டம்பரில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இதில், இந்தியாவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கெடுக்கப்படும். அதற்கு முன்பாக, வீடுகளை மட்டும் கணக்கெடுக்கும் பணியை மத்திய கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தொடங்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1ம் தொடங்கி, செப்டம்பர் 30 வரை நடக்கிறது.
இது தொடர்பாக கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீடுகள் கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள டாய்லெட் வசதி, டிவி, இன்டர்நெட், சொந்த வாகனங்கள், குடிநீர் ஆதாரம், குடும்ப தலைவரின் போன் எண் உட்பட 31 கேள்விகளை அதிகாரிகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்புக்காக மட்டுமே போன் எண் கேட்கப்படுகிறது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல.
லேண்ட்லைன் போன், செல்போன், ஸ்பார்ட் போன், சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ரேடியோ, டிவி, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் போன்றவை உள்ளதா என்ற தகவல்களும் கேட்கப்படும். கட்டிட எண், வீட்டில் போடப்பட்டுள்ள தரை, வீட்டின் நிலவரம், வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, குடும்ப தலைவரின் பெயர் மற்றும் பாலினம் ஆகியவையும் கேட்கப்படும்.
குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவரா அல்லது இதர பிரிவை சேர்ந்தவரா என்பதையும் அதிகாரிகள் கேட்க வேண்டும். வீட்டில் உள்ள மின் வசதி, கழிவறை வசதி, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, குளியலறை வசதி, சமையலறையில் காஸ் இணைப்பு உள்ளதா, சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் ஆகியவை பற்றி தகவலும் பெறப்படும்.
இந்த கணக்கெடுப்பு மொபைல் போன் ஆப் மூலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.