"இதுதான் இப்போ புது ட்ரெண்ட்...." "கால்களால் 'ஹாய்' சொல்லிக்குவோம்..." 'கொரோனா' கற்றுக் கொடுத்த புது 'பழக்கம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்க, கால்களை பயன்படுத்தும் புதிய கலாச்சாரம் உருவெடுத்துள்ளது.

இந்தியர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது கைகளைக் கூப்பி வணங்கி தங்கள் மரியாதையை செலுத்துவர். இதனால், வணக்கம் சொல்பவருக்கோ, அல்லது வணக்கத்தை பெறுபவருக்கோ எந்த வித பாதிப்பும் இல்லை. ஒருவரை ஒருவர் தொடாமலேயே தங்கள் மரியாதையை செலுத்தும் அழகான வழக்கம் அந்த காலம் முதலே இந்தியர்களிடம் வழக்கத்தில் இருந்துள்ளது.
ஆனால் வெளிநாடுகளில் வசிப்போர் கைகளை குலுக்கியோ, முத்தமிட்டோ, கட்டிப்பிடித்தோ தங்கள் மரியாதையையும், அன்பையும் செலுத்துவதை வழக்கமாக, கலாச்சாரமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கமே நாகரீக பழக்கம் என்றும் அவர்கள் கருதினர். ஆனால் ஒவ்வொரு முறையும் தொற்று நோய்கள் பரவும் போது இந்த பழக்க வழக்கத்தால் மேலை நாட்டவரே பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
அந்த வகையில் தற்போது கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், கைகளைக் குலுக்குவதோ, கட்டிப்பிடிப்பதோ, முத்தமிடுவதோ வேண்டாம் என்றும் இதனால் நோய்த் தொற்று வேகமாக பரவும் என்றும் உலக நாடுகள் எச்சரித்துள்ளன.
தற்போது இந்த பழக்கத்துக்கு சீனர்கள் ஒரு புதிய வடிவம் கொடுத்துள்ளனர். ஒருவரை பார்க்கும் போது கைகளை குலுக்குவதற்குப் பதிலாக கால்களால் தட்டிக்கொள்ளும் புதிய பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இதனால் தெருக்களில், நகர்ப்பகுதிகளில் வசிப்போர் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது தங்கள் கால்களை தட்டி தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். இந்த புதிய பழக்கம் கூட நன்றாகத்தான் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
