'பேபிக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதா'... 'ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த தம்பதி'...காத்திருந்த அதிசயம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 04, 2020 05:37 PM

எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தம்பதிக்கு பிறந்த குழந்தை, வைரஸ் பாதிப்பில்லாமல் பிறந்துள்ள சம்பவம் பலரையும் நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

AIIMS doc\'s COVID-19 positive, wife delivers infection free baby

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு பகலாக பயிற்சி மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் அவசர கால பணி என்பதால், அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவியும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவரான மனைவிக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.  அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே பிரசவம் நடக்கும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே கொரோனா சிகிச்சை அளிக்க பணியாற்றிய பயிற்சி மருத்துவருடன், அவசரகால பணிக்காக மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அவரது கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் பாதித்து உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. பிறக்கும் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் அனைவரிடமும் தொற்றி கொண்டது.

இந்த நிலையில், நேற்று இரவு கர்ப்பிணி மருத்துவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து பெண் மருத்துவர் நீரஜா பட்லா தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில், மருத்துவ தம்பதிக்கு அறுவை சிகிச்சை வழியே ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  அந்த குழந்தை வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமுடன் உள்ளது.

இது அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  தாய் மற்றும் சேய் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.  இதனிடையே இதுதொடர்பாக பேசிய பெண் மருத்துவரின் உறவினர்கள், ''தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என தெரிந்ததும் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க முடியாதோ என அவள் அஞ்சினாள். ஆனால் கொரோனா வைரஸ் தாய்ப்பால் வழியே பரவாது என்பதால், குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக'' அவர்கள் கூறியுள்ளார்கள்.