கொரோனா எதிரொலியாக... வீட்டிற்குள் முடங்கி இருப்பதால்... அதிகரித்த குடும்ப சண்டைகள்!... தேசிய மகளிர் ஆணையம் பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து கடந்த 1-ந்தேதிக்குள் பெண்களுக்கு எதிராக 257 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 24-ந்தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் வருமானத்துக்கு வழியின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சாதாரண சின்னச்சின்ன பிரச்சனைகள் கூட பூதாகரமாகி வன்முறையில் முடிகிறது.
எவ்வளவு சண்டை வந்தாலும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அதனை மறந்துவிட்டு பேசுவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. மேலும், தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதால் சண்டை மென்மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
இதன் எதிரொலியாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து கடந்த 1-ந்தேதிக்குள் பெண்களுக்கு எதிராக 257 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இதில் குடும்ப சண்டைகள் தொடர்பான புகார்கள் மட்டும் 69 ஆகும்.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறியதாவது:-
குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டை தொடர்பாக 69 புகார்கள் வந்துள்ளன. உண்மையில் சொல்லப்போனால் இதைவிட அதிகமான புகார்கள் வந்திருக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக பெண்கள் எங்களிடம் புகார் அளிக்க வரமுடிவதில்லை. போலீஸ் நிலையத்துக்கு செல்லவும் அச்சப்படுகிறார்கள். ஏன் என்றால் கணவரை போலீசில் பிடித்து கொடுத்தால் மாமியார் தங்களை சித்ரவதை செய்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். மேலும் காவலில் இருந்து கணவர் வெளியே வந்தால் மீண்டும் பிரச்சனை பெரிதாகும் என பயப்படுகிறார்கள்.
முன்பு சண்டை வந்தால் பெற்றோர் வீட்டுக்கு சென்று சில நாட்கள் தஞ்சம் அடைய முடியும். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் சண்டை, சச்சரவுக்களுக்கு இடையே கணவர் வீட்டுக்குள்ளேயே பெண்கள் முடங்கிக் கிடக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.