'பெண்களை விட ஆண்களை அதிகமாக கொன்று குவித்த கொரோனா!'... என்ன காரணம்?... பிரம்மிக்கவைக்கும் ஆய்வு முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு அறிவியலாளர்கள் பல காரணங்களை முன்வைக்கிறார்கள்.
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வாளர்களால் முழுமையான விவரங்களை அறிய இயலவில்லை. ஆனால் இதுவரை சீனா, தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8 சதவீதம் பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் 1.7 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவிலும் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இப்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆண்கள் அதிக அளவில் உயிரிழப்பதற்கு அவர்கள் மத்தியில் இருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், மருத்துவமனைக்கு செல்ல காலதாமதம் செய்வது, கைகழுவும் பழக்கத்தை பெண்களை போல் தீவிரமாக பின்பற்றாதது என பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, அபாயங்களை மேற்கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு இயல்பிலேயே ஆற்றல் அதிகம் இருப்பதுதான் உண்மையான காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் ஆண்களை விட திடமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. உலகெங்கும் 100 வயதை கடந்து வாழ்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள்.
அதுவும் 110 வயதை எட்டுபவர்களில் 95 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு பதில் பெண்களின் குரோமோசோம்களில் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பெண்களின் டிஎன்ஏவில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கின்றன. ஆனால், ஆண்களின் டிஎன்ஏவில் ஒரு X குரோமோசோம் தான் இருக்கிறது. இந்த X குரோமோசோம் தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்கிறது. எனவே ஒரே ஒரு X குரோமோசோமுடன் இருக்கும் ஆண்களைவிட இரண்டு X குரோமோசோம்களை கொண்ட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயல்பிலேயே அதிகம் இருப்பதில் வியப்பில்லை.
அதேபோல் பெண்களின் ஹார்மோன்களும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்களிடம் அதிக அளவு காணப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஆண்களிடம் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் நோய் எதிர்ப்பு திறனை தடுப்பதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடலளவில் பார்ப்பதற்கு ஆண்களைவிட பெண்கள் பலவீனமானர்களாக காட்சியளித்தாலும் உண்மையில், கொரோனா போன்ற தொற்று நோய்களை மேற்கொள்வதிலும், அவர்களே வலிமையானவர்களாக இருக்கிறார்கள் என்பதே ஆய்வுகள் கூறும் முடிவாக இருக்கிறது.