என் ஒன்றரை 'வயசு' மவனோட மொகத்த... கடைசியா ஒரு 'தடவ' பாக்க முடிலயே... உறையவைத்த புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 18, 2020 10:11 PM

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Viral photo of Migrant labourer have a sad story behind

போக்குவரத்து முடக்கப்பட்டதன் காரணமாக வேறு மாநிலங்களில் தொழில் செய்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து செல்ல ஆரம்பித்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு தரப்பில் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதும் அது போதுமானதாக இல்லை என பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், சைக்கிள் மூலமும் தொழிலாளர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் செல்போனில் பேசியபடி அழுதுகொண்டு இருக்கும் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் அதுல்யாதவ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருப்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் புகார் பண்டிட் ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். டெல்லியில் கட்டிட வேலை செய்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அவரது மனைவி அழைத்து உடல்நலக்குறைவின் காரணமாக ஒன்றரை வயது மகன் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனது மகனை கடைசியாக ஒரு தடவை காண நினைத்து போதிய ரெயில் வசதி இல்லாத நிலையில் டெல்லியிலிருந்து சொந்த ஊரான பீகாருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார். டெல்லி - உத்திரப்பிரதேச மாநிலம் எல்லையான காசியாபாத் பகுதியை வந்தடைந்தார். ஆனால் அவரை உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். எல்லைப்பகுதியில் இரண்டு முதல் மூன்று நாட்களை கழித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த டெல்லி போலீசார், ராமைக் கண்டுபிடித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் செல்லும் சிறப்பு ரெயிலில் அவரை கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைத்தனர். இறுதியில் சொந்த ஊர் அடைந்த ராமிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை வர தாமதமானதால் மகனின் உடலை அடக்கம் செய்து விட்டதாக அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனைக் காண பல இன்னல்களை தாண்டி வந்த தந்தையால் மகனை காண முடியாமல் போன கொடிய நிகழ்வு அரேங்கேறியுள்ளது.