‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் காலில் எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 40 வயதான சாக்சி கண்டேல்வால் என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால், சாக்சிக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தரையில் ஒரு போர்வை கொண்டு படுக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாக்சியின் காலில் எலி கடித்து ரத்தம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டைம் ஆப் இந்தியா பத்திரிகைக்கு சாக்சியின் கணவர் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி போர்த்தியிருந்த போர்வையை விலக்கி பார்த்தபோது அவரது காலில் எலி ஒன்று கடித்து ரத்தம் வெளியே வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் அப்போது மருத்துவமனை ஊழியர்கள் யாரும் இல்லாததால், தானே மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மருந்தும், பேண்டேஜூம் வாங்கி வந்து மனைவியின் காயத்துக்கு மருந்துபோட்டுள்ளார். அப்போது தனது மனைவி வலியால் துடித்ததாக சாக்சியின் கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.