மருத்துவமனையில் கொரோனா 'சிகிச்சை' பெற்றவரின் உடல்... பேருந்து நிலையத்தில் கிடைத்த 'அவலம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 17, 2020 10:07 PM

குஜராத் மாநிலம், அகமதாபாத் பேருந்து நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடலை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் மற்றும் கடிதம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Corona patient body found near bus stand in Ahmedabad

அதன் மூலம் அவரின் முகவரி மற்றும் குடும்பம் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதுகுறித்து சகான் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இறந்தவரின் பெயர் சகான் மக்வானா (67) என்பதும், அவர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பின்னர், சகான் குடும்பத்தினர் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சகானுக்கு சில நாட்கள் முன்பு மூச்சு  விடுவதில் சிரமம் இருந்த நிலையில் அவரை அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வேண்டி சேர்த்தோம். அப்போது அவரை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. மேலும், அவருக்கு உடல்நிலை சீரானதும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை சார்பில் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக சகானின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சகானின் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

நிலைமை இப்படி இருக்கையில், அவரது உடல் பேருந்து நிலையத்தில் கிடைத்த தகவல் அறிந்த குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். மருத்துவமனையில் இருந்த நபர் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபாணி இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரின் உடல் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.