‘ஊரடங்கு தளர்வுக்கு முன்’... ‘வழக்கத்தை விட’... ‘கடந்த 3 நாட்களில் மோசமான நிலைமை’!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் குறைந்த அளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை, 21 நாட்களுக்கு முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மே 3 வரையும், பின்னர் மே 17 வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று முதல் ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் தாக்கம் இந்தியாவில் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 42,533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2553 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்துள்ளது. 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் டெல்லி (427 புதிய நோய்த்தொற்றுகள்), குஜராத் (374), பஞ்சாப் (330), தமிழ்நாடு (266), அரியானா (66), ஜம்மு காஷ்மீர் (35) ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பஞ்சாப்பில் கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரத்திற்குள் தினமும் ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்யும் திறனை அடைய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.