நடந்து சென்ற பெண்ணை 'கொரோனா' என்றழைத்து ... படு கேவலமான செயலில் ஈடுபட்ட இளைஞன் ... அதிர்ச்சியில் உறைந்து நின்ற இளம்பெண்
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவலாக இருந்த போதும், டெல்லி அருகே இளம்பெண் ஒருவரை 'கொரோனா' என்றழைத்து அந்த பெண் மீது இளைஞர் ஒருவர் எச்சில் உமிழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. பல மாநிலங்கள் 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது. இந்நிலையில், மணிப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் வடக்கு டெல்லியிலிருந்து விஜயநகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணை திட்டியதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் அந்த இளம்பெண்ணை 'கொரோனா' என அழைத்து அந்த பெண்ணின் மீது புகையிலை எச்சிலை உமிழ்ந்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பெண் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் புகாரளித்துள்ளார். போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் வட கிழக்கு மாநில மக்கள் பார்ப்பதற்கு சீனாக்காரர்கள் போல் இருப்பதால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போதே இவர்களை சந்தேகத்தின் பெயரில் மற்ற மக்கள் தவிர்த்து வருவதாக சில வடகிழக்கு மக்கள் கூறியிருந்தனர்.
முன்னதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாங்கள் பார்ப்பதற்கு சீனர்கள் போல இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக வடகிழக்கு மாணவர்கள் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். 'வடகிழக்கு மக்களுக்கு எந்த சிக்கல் நேர்ந்தாலும் புகார் அளிக்கலாம், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
