இரண்டு வாரம் 'WORK FROM HOME' ... வீட்ல 'ஜாலியா' இருக்கலாம் ... அப்போ இவங்களோட நிலைமை ?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 18, 2020 08:52 PM

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலுள்ள பல மாநிலங்கள் அதிகமாக மக்கள் எங்கும் கூட வேண்டாம், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடல் என பல நடவடிக்கைகள். எப்போதும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் நாடு தற்போது சற்று அமைதியாகவே இயங்குகிறது. கார், பைக் என பறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் 'Work from home' என்ற பெயரில் வீட்டிற்குள் வீட்டு வேலைகளுடன் சேர்த்து அலுவலக வேலைகளையும் சேர்த்து செய்து வருகிறார்கள்.

What is the current situation of Daily wage workersrs

சிறப்பாக உடையுடுத்தி அலுவலகம் சென்று அமைதியாக வேலை செய்வதிலும், வீட்டில் இருந்து கொண்டு ஒரு பக்கம் மனதில் தோன்றும் செயல்களை செய்து வேலை செய்வதிலும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. பணிபுரியும் இடம் மட்டுமே வேறு. ஆனால் நாம் செய்யும் வேலைகள் அதே வேகத்துடன் நடைபெற்று கொண்டே தான் இருக்கும். ஐ.டி நிறுவனங்கள் ஆரம்பித்து கணினி மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தும் அனைவருக்கும் 'Work from home' என்ற வார்த்தை மிக எளிதாக தோன்றி விடலாம்.

ஆனால், வீட்டில் முடங்கி கிடந்து வேலை செய்யும் நபர்களுக்கு இப்போது கேப் டிரைவர்கள் தேவையில்லை. காரினை சாலையோரம் நிறுத்தி விட்டு தங்களது குடும்பத்தின் வரும் நாட்களின் நிலை குறித்து எண்ணிக் கொண்டிருப்பார்கள் அந்த கார் ஓட்டுநர்கள். அலுவலகத்தின் இடைவேளை நேரங்களில் தேநீர் அருந்தும் சிறு சிறு கடைகள் மற்றும் உணவகங்களில் தற்போது பால் கொதிக்க, இலையும், உணவும் தயாராக இருக்கும். ஆனால் அங்கு தினந்தோறும் உணவருந்த வரும் மக்கள் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உணவு பரிமாற வேண்டிய இலை காய்ந்து சருகாக காத்திருக்கும்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம். மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்கப்பட்டு அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்களது தினசரி வாழ்க்கையை கடத்திக் கொள்வார்கள். பொழுதுபோக்கு என்கிற பெயரில் வெளியில் சென்று சுற்றித் திரியும் ஒன்றை மட்டுமே அவர்கள் இழந்திருக்கக் கூடும். ஆனால் நான் மேற்கூறிய தினசரி கூலியை மட்டுமே நம்பியிருக்கும் மக்களின் நிலை என்ன? 'இன்னைக்கு ஒரு 4 சவாரி கிடைச்சுதுன்னா பாப்பாவுக்கு புடிச்ச பொம்மையை வாங்கி குடுத்துடலாம்' என மனைவியிடம் கூறிவிட்டு கார் ஓட்டும் கணவனின் மனநிலை என்னவாக இருக்கும். இதே மனநிலை தான் இதே போல தினசரி கூலியை அதிகம் நம்பியிருக்கும் மற்ற தொழிலாளர்களின் நிலை.

மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகும் போது தான் மனிதம் என்னும் உயர்ந்த குணம் பிறந்து உயர்ந்து நிற்கிறது. தினசரி கூலி வேலைகளை செய்யும் மனிதர்களை அவ்வப்போது வெளியில் செல்லும் நிலையில் நீங்கள் சந்திக்க நேர்ந்தால் உங்களால் முடிந்த உதவியை செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள். தினமும் உங்களுக்காக வேலை செய்யக் காத்திருக்கும் அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவ கை கொடுங்கள். இப்போது இல்லையென்றால் இனி ஒரு தடவை மனிதம் பிறக்கும் வரை காத்திருக்கும் அவலநிலை ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

Tags : #DAILY WAGES #CORONA VIRUS