'அதிரவைத்த காஃபி நாயகனின் மரணம்'... 'காஃபி டேவின் 2,000 கோடி எங்க போச்சு'?...'பீதியில் புதிய ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 16, 2020 04:46 PM

காஃபி டே என்ற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்  வி.ஜி.சித்தார்த்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டது தொழில் துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  கடன் சுமை காரணமாக சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படும் நிலையில், காஃபி டே நிறுவனத்துக்கு 6,500 கோடி ரூபாய் கடன் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீடு செய்தனர்.

2,000 crore missing at Coffee Day after founder Siddhartha’s suicide

இதற்கிடையே, சித்தார்த்தா மரணம் தொடர்பாக காஃபி டே நிறுவனத்தின் வாரியம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்தாவுக்குச் சொந்தமான காஃபி டே வங்கிக் கணக்குகள் குறித்து வாரியம் நடத்திய விசாரணையின் முடிவில், நூறு பக்க வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சித்தார்த்தாவுக்குச் சொந்தமான காஃபி டே வங்கிக் கணக்கில் இருந்த பல பில்லியன் பணம் காணாமல் போயுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் இந்திய மதிப்பு ரூ.2,000 கோடி அளவு இருக்கும் என  கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முழுமையான விசாரணை இன்னும் முடியாத நிலையில், இதன் மதிப்பு மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தாவின் மரணத்துக்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு தொடங்கிய இந்த விசாரணைக்கு, இந்தியாவின் கூட்டாட்சி அமலாக்க நிறுவனத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி அசோக் குமார் மல்ஹோத்ரா தலைமை தாங்குகிறார். இந்தியாவின் முதன்மை நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற ஒரு மூத்த வழக்கறிஞர் ஒருவர் இவருக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்.

மார்ச் 2019 நிலவரப்படி காஃபி டே அதன் இருப்புநிலைக் குறிப்பில் சுமார் 24 பில்லியன் பணம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சித்தார்த்தாவின் திடீர் மரணம் நிறுவனத்தை கடுமையான பணப்புழக்க நெருக்கடிக்கு தள்ளியது. இதன்காரணமாக அன்றாடச் செலவினங்களுக்காகப் போராடுவது மற்றும் ஊழியர்களுக்குச் சம்பளத்தைச் செலுத்துவதில் காஃபி டே கடும் சிரமத்தை சந்தித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஃபி தோட்டங்களை பிணையாக வைத்து வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது.  100 பில்லியனுக்கும் அதிகமான அளவு கடன் தொகையால் சித்தார்த்தா கஷ்டப்பட்டு வந்ததாகவும், ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் மீண்டும் மீண்டும் கடன்கள் வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை முழுவதுமாக வெளிவந்த பின்பு தான்,  பதில் சொல்லப்படாத பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #SUICIDEATTEMPT #CAFé COFFEE DAY #SIDDHARTHA #2 #000 CRORE