‘15 மாசமா தண்ணீல கிடந்த ஐபோன்’.. பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Oct 01, 2019 12:47 PM
15 மாதங்களாக தண்ணீரில் மூழ்கி கிடந்த ஐபோன் மீண்டும் இயங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென்னட் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தண்ணீருக்கு அடியில் இருக்கும் அரிய பொருள்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஒருநாள் தெற்கு கரோலினாவில் உள்ள எடிஸ்டோ ஆற்றில் பென்னட் தேடுதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு நீருக்கு அடியில் ஒரு ஐபோன் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்ததும் போனிற்கு சார்ஜ் போட்டுப் பார்த்துள்ளார். அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் போன் வேலை செய்திருக்கிறது. இதனை அடுத்து போனை எப்படியாவது உரியவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் போனில் பாஸ்வேர்ட் கேட்டுள்ளது. இதனால் போனில் இருந்த சிம் கார்டை எடுத்து, உரிமையாளரின் நம்பரை எப்படியோ கண்டுபிடித்துள்ளார்.
உடனே அந்த நம்பருக்கு அழைத்து செய்து போன் கிடைத்தது குறித்து உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஐபோனின் உரிமையாளர் எரிக்கா என்ற பெண், தாங்கள் 15 மாதங்களுக்கு முன்பு குடும்ப சுற்றுலா சென்றபோது போனை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த போனில் உயிரிழந்த தனது தந்தையின் உரையாடல்கள் இருந்ததாகவும், போன் தொலைந்ததால் சோகத்தின் உச்சிக்கே சென்றதாகவும் எரிக்கா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து எரிக்காவிடம் ஐபோனை பென்னட் ஒப்படைத்துள்ளார். 15 மாதங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்த ஐபோன் இயங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
