‘கொரோனாவுக்கு இடையே’... ‘சீன எல்லையில்’... ‘அமெரிக்காவின் நடவடிக்கையால்’... ‘அதிகரிக்கும் பதற்றம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்தெற்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸை ஆய்வகத்தில் இருந்து பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருவதும், அதற்கு சீனா மறுப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்த இரு நாடுகளின் மோதல்போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகின்றது. கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தனது அண்டை நாடுகள் கவனம் செலுத்தி வரும், அதே நேரத்தில், அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனாவின் போக்கு ஆத்திரமூட்டுவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் தெற்கு எல்லையில் மலேசியாவுக்கு அருகில், அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ‘பங்கர் ஹில்’ எனும் ஏவுகணை கப்பல் ஆகியவை தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் இந்தோபசிபிக் பிரிவு செய்தித் தொடர்பாளர் நிக்கோல் ஸ்வெக்மேன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் மற்றும் கடல் பகுதிக்கு மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் உரிமை கோரி வருகிறது. கடந்த வாரம் மலேசிய எண்ணெய் நிறுவனத்தின் துளையிடும் ஆய்வுகளை மேற்கொள்ளும் கப்பலான வெஸ்ட் கேப்பல்லாவை மலேசிய கடல் எல்லைக்குள் பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வருகிறது சீன அரசாங்கம்.
இதையடுத்தே தனது ஆதரவு நாடுகளை காப்பாற்றுவதற்காக, சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் போர்கப்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து சீனாவும் கொரோனாவின் கோரப்பிடியிலும் அப்பகுதியில் தனது ராஜ்யத்தின் பலத்தைக் காட்ட ராணுவ பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் சர்வதேச கடல் சட்டம் அனுமதிக்கும் எந்தப் பகுதிக்கும் தங்களின் கப்பல் செல்லும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.