இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 21, 2020 02:01 PM

கொரோனாவின் கோரமான பாதிப்புகளை நாம் இனிதான் சந்திக்க இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

WHO Head Warns That Worst Of Coronavirus Is Ahead Of Us

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இருந்தே அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை பெருந்தொற்றாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என அழைப்பும் விடுத்தது. இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட சில நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தற்போதுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் மோசமான முகத்தை  நாம் இன்னும் பார்க்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ், "நாம் அனைவரும்  ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸை தடுக்க வேண்டும். மக்கள் பலர் இன்னும் இதன் வீரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில் அதன் கோரமான பாதிப்புகளை  இனிதான் நாம் சந்திக்க போகிறோம்" என எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கான காரணங்கள் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக கொரோனா வைரஸ் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. அது நடந்தால் அங்குள்ள மோசமான சுகாதாரம் காரணமாக  ஆப்பிரிக்க நாடுகள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. அதைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் வேளையில் உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.