அவர்களை கடலிலேயே 'சுட்டு' வீழ்த்த உத்தரவிட்டுள்ளேன்... கொரோனாவுக்கு நடுவிலும் 'கொந்தளிக்கும்' டிரம்ப்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 23, 2020 12:18 AM

கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சூழ்நிலையிலும் அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை தீருவதாக இல்லை.

Shoot down and Destroy any and all Iranian gunboats: Trump

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாக்தாத் நகரில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவத்தளபதி காசிம் சுலைமானி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனால் இரு நாடுககளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவியது. தற்போது கொரோனவால் உலகம் முழுவதும் மிக மோசமான சூழ்நிலையை சந்தித்து வரும் இந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் சற்றும் தணிவதாக இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே ஈரான் சில புரட்சி அமைப்புகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் இதுகுறித்து ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப், ''ஆயுதம் ஏந்திய இரானிய படகுகள் அமெரிக்க கப்பல்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால், அவைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டம் உருவாகியுள்ளது. ஈரான் அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் சில புரட்சி படைகளின் 11 கப்பல்கள் அமெரிக்க கப்பகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், அமெரிக்க கப்பலின் பயணத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவதுதான் திட்டம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்தே டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு பதில் அளித்திருக்கும் ஈரான் ராணுவ செய்தித்தொடர்பாளர், ''அமெரிக்கா மற்றவர்களை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு அவர்கள் படையில் இருக்கும் வீரர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும்,'' என கருத்து தெரிவித்திருக்கிறார். கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா அதற்கு இடையிலும் வட கொரியாவை கண்காணிப்பது, சீனாவுடன் மோதுவது,ஈரானுக்கு எச்சரிக்கை விடுப்பது ஆகியவற்றை செய்து வருவது  மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.