அந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா?.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் இருந்த பரவிய வைரஸிற்கு நாங்கள் இழப்பீடு கேட்டோமா? என அமெரிக்காவுக்கு சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா சீனா மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. கொரோனா வைரஸை சீனா தான் திட்டமிட்டு பரப்பியதாகவும், அதனால் வைரஸ் பரவியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் சீனா உண்மையை மறைத்திருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இதனால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தை போர் எழத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷீவாங் (Geng Shuang),‘கடந்த 2009ம் ஆண்டு ஹெச்1என்1 (H1N1 flu) என்ற பன்றிகாய்ச்சல் முதன்முதலில் அமெரிக்காவில்தான் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 214 நாடுகளுக்கு பரவி சுமார் 2 லட்சம் உயிர்களை கொன்றது. இதற்காக அமெரிக்காவிடம் யாராவது இழப்பீடு கேட்டோமா?.
அதேபோல் 1980-களில் அமெரிக்காவில்தான் எய்ட்ஸ் (AIDS) கண்டறியப்பட்டது. இந்த நோய் உலகம் முழுவதும் பெரும் துயரமாக மாறியது. இதற்கு யாராவது அமெரிக்காவை பொறுப்பேற்க கூறினோமா?. 2008ம் ஆண்டு லேஹ்மன் (Lehman Brothers) சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தால் உலகப் பொருளாதாரமே பாதிப்படைந்ததாக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி (Kishore Mahbuban) குறிப்பிட்டிருந்தார். அதற்கு யாராவது அமெரிக்காவிடம் இழப்பீடு கேட்டோமா?’ என பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு கொந்தளித்தார்.