‘இப்போதைக்கு’ கொரோனாவை ‘ஒழித்தாலும்’... ‘இது’ ஒன்றுதான் ‘நிரந்தர’ தீர்வு... ‘எச்சரிக்கும்’ அமெரிக்க ‘விஞ்ஞானி’...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் வரலாம் என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தின் தொற்று நோயியல் ஆய்வுகளுக்கு தலைமை தாங்கும் விஞ்ஞானி அந்தோணி ஃபாசி. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்துப் பேசியுள்ள அவர், “கொரோனா வைரஸ் தற்போது தெற்கு ஆப்பிரிக்காவிலும், புவியின் தெற்குப் பகுதியில் உள்ள குளிர் காலத்தை எதிர் நோக்கும் நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. அங்கு கொரோனா தொற்று கடுமையாக பரவினால், இரண்டாவது முறையாக வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியாது. கொரோனாவிற்கான தடுப்பூசியைத் தயாரித்து, விரைவாக அதைப் பரிசோதித்து, அடுத்த கொரோனா வைரஸ் சுழற்சி வருவதற்குள் நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம். இப்போது நாம் கொரோனாவை ஒழித்துவிட்டாலும் அடுத்த சுழற்சிக்கு நாம் நிஜமாகவே தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கென்று இதுவரை எந்தவொரு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கபடாத நிலையில், சமீபத்தில் முதல் முறையாக மனிதர்களுக்கு எம்ஆர்என்ஏ- 1273 எனும் கொரோனா தடுப்பூசிப் பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. இதை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்து வரும் நிலையில், சீனாவிலும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் மனிதர்களுக்குத் தடுப்பு மருந்தைச் செலுத்தி தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஒப்புதல் பெற்றுள்ளனர். மேலும் உலக சுகாதார நிறுவனம் அடுத்த ஆண்டின் இறுதி வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சந்தைக்கு வராது எனக் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
