'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தவித்து வரும் நிலையில், குருத்வாராவில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா செயல்பட்டு வருகிறது. இதில் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், தற்கொலை படை மூலமும் தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த கோர தாக்குதலில் குருத்வாராவில் இருந்த 27 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் படைகளை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
மக்கள் மீதான தாக்குதலுக்கும் தலிபான்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. குருத்வாரா மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.