‘சின்ன வயசுலேயே பெரிய மனசும்மா’.. இந்திய வம்சாவளி 10 வயது சிறுமியை ‘வெள்ளை மாளிகைக்கு’ அழைத்து கவுரவித்த டிரம்ப்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் நெருக்கடி சமயத்தில் உதவிகளை செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமியை டிரம்ப் கவுரப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா நெருக்கடி சமயத்தில் உதவிகள் செய்பவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று கவுரப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரவ்யா அண்ணப்பரெட்டி (10) என்ற சிறுமியை டிரம்ப் கவுரப்படுத்தினார். இவர் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது உள்ள கொரோனா நெருக்கடி சமயத்தில் சரவ்யா சக மாணவிகளுடன் சேர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார்.
மேலும் 200க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பினார். இந்த சிறுவயதில் சரவ்யா அண்ணப்பரெட்டிக்கு இருக்கும் கொடை உள்ளத்தை பாராட்டும் விதமாக அதிபர் டிரம்ப், அவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து கவுரப்படுத்தினார். சிறுமி சரவ்யா அண்ணப்பரெட்டியின் பெற்றோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
