"H1N1 பன்றிக்காய்ச்சல் வந்தப்போ.. ஒபாமாவும் தூங்கி வழியும் ஜோவும் எடுத்தீங்களே ஒரு நடவடிக்கை.. அதைவிட..".. ட்விட்டரில் பொங்கிய ட்ரம்ப்.. காட்டமான பதிலடி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 11, 2020 10:53 AM

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவில் அமெரிக்காவில் 13 லட்சத்தை 67 ஆயிரத்து 638 பேரை கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது.

We are getting great marks than Obama, Sleepy Joe, says trump

இதில் 80 ஆயிரத்து 787 பேர் கொரோனாவுக்கு பலியாகியுமுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இந்த ஊரடங்கு உத்தரவால், பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாகவும் இந்த பொருளாதார சரிவை சரி செய்வதற்காக ட்ரம்ப் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த மோசமான நிலைமைக்கு காரணம் டிரம்ப் கொரோனா வைரஸை மிக அலட்சியமாக கையாண்டதுதான் என்று முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுபற்றி பேசிய ஒபாமா , “இந்த கொரோனா பேரழிவை சிறந்த அரசுகளே முறையாக கையாள முடியாத போது டிரம்ப் நமக்கு மறக்க முடியாத காயத்தை வழங்கிவிட்டார்.  இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தை அவர் கையாண்ட விதமானது, அவரது குழப்பமான பேரழிவு மேலாண்மையை காட்டுகிறது” என்றும்  “கொரோனா போன்ற ஒரு தொற்றினை சமாளிப்பதற்கு சுயநலம், பழமைவாதம், மற்றவர்களை எதிரியாக பார்க்கும் மனோபாவம் அற்ற வலிமையான அரசுதான் தேவை” என்றும் “அமெரிக்காவின் நெருக்கடியான நேரத்தில் நடக்கக்கூடிய இந்த தேர்தலில் ஜோ பிடனுக்கு ஆதரவாகவே, குரலெழுப்ப போகிறேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒபாமாவின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “எங்களது கொரோனா வைரஸை கையாளும் திறனுக்கு சிறந்த மதிப்புகளே கிடைத்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கொரோனா உருவான தொடக்க காலத்திலேயே சீனாவிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்  H1N1 பன்றிக்காய்ச்சல் உருவானபோது  தூங்கி வழியும் ஒபாமாவும் ஜோவும் (ஜோ பிடன், அதிபர் வேட்பாளர்) அந்நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கையாண்ட நடவடிக்கைகள் மிகவும் மோசமான மதிப்புகளை பெற்றதால்தான் மோசமான வாக்குகள் விழுந்தன. இன்னுமா உங்களுக்கு விளங்கல!” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.