இந்த ‘கொரோனா’ எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிருச்சு.. பகிரங்கமாக விமர்சித்த ‘ஒபாமா’.. அதுக்கு டிரம்ப் சொன்ன பதில்..?
முகப்பு > செய்திகள் > உலகம்ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இதனால் அங்கு மீண்டும் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, டிரம்பை விமர்சனம் செய்துள்ளார். ஒபாமா, ஒருவரை பற்றியோ அல்லது ஒரு நிர்வாகத்தைப் பற்றியோ மிகவும் அரிதாகவே விமர்சனம் செய்வார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களில் 2 முறை டிரம்ப் அரசாங்கத்தின் மீது ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிய அவர், ‘கொரோனாவைத் தடுக்க டிரம்ப் அரசு கையாண்டது குழப்பமான மற்றும் முழுமையான பேரழிவில் முடிந்துள்ளது. இந்த பெரும் தொற்றை சமாளிக்க அமெரிக்காவுக்கு மிகவும் வலிமையான தலைமை தேவை’ என விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சில ஆண்டுகளுக்கு முன் ஒபாமா ஆட்சியில் இருந்தபோது H1N1 பன்றிக்காய்ச்சல் நடவடிக்கைகள் மிகவும் மோசமான மதிப்புகளை பெற்றன. அதனுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதில் நாங்கள் சிறந்த மதிப்புகளை பெற்றுள்ளோம்’ என பதிலளித்தார்.
இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை இணையம் மூலம் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஒபாமா, ‘கொரோனா தொற்று நாட்டின் திரைச்சீலையை கிழித்துவிட்டது. பெரும்பாலான தலைவர்கள், அதிகாரிகள் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நாட்டு தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்த கொரோனா தொற்று காட்டிவிட்டது’ என மீண்டும் விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த டிரம்ப், ‘ஒபாமா கூறிய கருத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் ஒரு திறைமையற்ற அதிபராக இருந்தார். அவ்வளவுதான் சொல்ல முடியும். முற்றிலும் திறைமையற்றவர்’ என குறிப்பிட்டுள்ளார். மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா மாறிமாறி விமர்சனம் செய்து வருவது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
