'2003-ல் கற்றுக்கொண்ட பாடம்’... ‘கொரோனா வைரஸால்’... 'உலக நாடுகள் அலறும் நிலையில்'... ' தைவான் கட்டுப்படுத்தியது எப்படி?'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 06, 2020 05:23 PM

உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) உறுப்பு நாடாகக்கூட தைவான் நாட்டை இணைத்துக்கொள்ள மறுத்து வரும் நிலையில், தைவான் நாடு கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Taiwan’s Viral Success in Corona Makes It Harder to Ignore

பெரும் வல்லரசு நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸின் தாக்குதலால் கடும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சீனாவுக்கு அருகில் 80 மைல் தொலைவில், சுமார் 2.3 கோடி மக்களை கொண்ட சிறிய நாடான தைவான், சீனாவின் அரசியல் காரணங்களால் உலக அரங்கில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது வல்லரசு நாடுகளையும், வளரும் நாடுகளையும் வாய் பிளந்து பார்க்க வைத்திருக்கிறது.

கடந்த 2003-ல் சார்ஸ் வைரஸ் பரவிய போது தைவான் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தைவானுக்கு உதவியது. இதனால், கடந்த டிசம்பர் இறுதியிலேயே, எல்லைகள் மூடப்பட்டதுடன், முகமூடி அணியவும் உத்தரவிடப்பட்டது. இது எளிதாக கிடைக்கும் வகையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தது. தைவானில், உலக தரத்திலான மருத்துவ வசதிகளும், திட்டங்களும் உள்ளன. இதனால் வுஹானில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும், சார்ஸ் வைரஸ் கற்று கொடுத்த பாடத்தின்படி, தைவான் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கையில் இறங்கினர்.

பொது மக்களின் நலனை காக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக 124 குழுக்கள் அமைக்கப்பட்டன. சீனாவிற்கு செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்தது. அந்நாட்டிற்கு செல்லும் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தியது. விதிகளை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தது. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை செய்தது. வதந்தி பரப்புவோர்களை தண்டிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்கியது. மேலும் கொரோனா தொற்று குறித்து தைவான் அதிகாரிகள் தினமும் விளக்கம் அளித்தனர்.

இந்த நடவடிக்கை, உலகளாவிய தொற்றை கட்டுப்படுத்தும் போது எப்படி செயல்படுவது என்பது குறித்து சர்வதேச நாடுகளுக்கு பாடம் கற்று கொடுத்தது.சீனா உள்ளிட்ட பல நாடுகளில் அமல்படுத்தப்படும் கடுமையான ஊரடங்கு போல் தைவானில் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாலும், வெளிநாடுகளில் இருந்த பலர் தைவான் நாட்டுக்கு திரும்பியிருப்பதாலும் தற்போது இங்கு கடந்த ஒரு வாரமாகதான் social distancing எனச் சொல்லப்படும் சமூக விலகல் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

தைவானில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது ஜனவரி மாதம் 21-ம் தேதி. அப்போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களில், ஏப்ரல் 1-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, அங்கு 329 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனாவுக்கு எதிராக தைவான் வெற்றி கொண்டிருப்பதற்கு இந்தத் தரவுகளே சாட்சியாக உள்ளன.