‘கொரோனா வைரஸ் தான் பர்ஸ்ட்’... ‘இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’... ‘ஐ.நா. கோரிக்கைக்கு தலை அசைத்த நாடு’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 10, 2020 10:58 PM

கொரோனா வைரசை வேகமாக பரவி வருவதால், ஏமனில் 2 வாரங்களுக்கு போரை நிறுத்தி வைப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

Saudi Arabia declares coalition\'s ceasefire in Yemen over coronavirus

ஏமனில் அந்த நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் அங்கு களத்தில் உள்ளன. இந்த கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஏற்கனவே உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஏமனில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் வகையில், உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஏமன் மற்றும் சவுதி அரேபியா அரசுகளையும், ஹவுதி கிளர்ச்சியாளர்களையும் ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் ஏமனில் 2 வாரங்களுக்கு சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சண்டை நிறுத்தம் அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் துறைமுக நகரமான மரீப்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.