‘ஊரடங்கு’ காலத்துல மக்கள் ‘இதுல’ தான் அதிக நேரம் செலவழிக்காங்கலாம்.. போன வார ரெக்கார்ட் மட்டும் கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு நேரத்தில் நாடு முழுவதும் மக்கள் எதில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என பார்க் மற்றும் நீல்சன் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வீட்டுக்குள் குழந்தைகளுடன் விளையாடுவது, மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடுவது என மக்கள் பொழுதை கழிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் தொலைக்காட்சி பார்ப்பதிலும், செல்போன் உபயோகிப்பதிலும் நேரத்தை செலவிடுகின்றனர்.
இதுதொடர்பாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சில் (பார்க்) மற்றும் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், ஊரடங்கு காலத்தில் இந்திய மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதில்தான் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் இந்தியர்கள் 1.27 டிரில்லியன் நிமிடங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துள்ளதாகவும், இது ஒரு வாரத்தில் தொலைக்காட்சி பார்த்த அதிக நேரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமான சேனல்களை மாற்றி மாற்றி பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சராசரியாக ஒருவர் 23 சேனல்களை பார்ப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் பிரைம் டைம் பார்வையாளர்கள் 11 சதவீதமும், பிரைம் டைம் அல்லாத நேரத்தில் பார்வையாளர்கள் 81 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பலர் நள்ளிரவுக்கு பிறகும் (இரவு 1 மணி முதல் 2 மணி வரை) தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் அதிகாலையிலேயே (அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை) பார்க்க தொடங்குகின்றனர். கடந்த வாரம் திரைப்படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
