'தமிழகத்தில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா தொற்று!'... தமிழக அரசு தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பரிசீலனை செய்து வருவதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்புகளை நாள்தோறும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்து வந்தார். இந்நிலையில், இன்று தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 இல் இருந்து 911 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களை போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதமர் உடனான ஆலோசனைக்குப் பின், ஊரடங்கு நீட்டிப்பதைப் பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்றும் கூறினார்.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு பரவி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 44 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் நிலையில் தான் உள்ளது. தொடர்பை கண்டறிய முடியாத நிலை வந்தால்தான் 3ஆம் நிலையை அடைந்ததாக கருத முடியும். கொரோனா பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். புதிதாக பாதிப்புக்குள்ளான 77 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்" என்று தெரிவித்தார்.