‘கொரோனா பாதிச்சவங்கள விட எங்க நிலைமை கொடுமை’.. ‘கருணை உள்ளம் கொண்ட யாராச்சும் உதவுங்க’.. திருநங்கைகள் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என திருநங்கைகள் கண்கலங்க வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய உதவிகள் கூட கிடைக்காமல் தவிப்பதாக கரூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மற்றவர்களை தேடித்தேடி உதவுபவர்கள்கூட தங்களை கண்டதும் ஒதுங்குவதாகவும், உணவுக்கூட கிடைக்காமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த திருநங்கை ஒருவர்,‘கரூர் மாவட்டத்தில் பரவலா வசிக்கிறோம். கடை வசூலுக்கு போறதும், சமையல் வேலைக்கு போறதும்தான் எங்க வாழ்வாதாரம். எங்களுக்கு வேற எந்த தொழிலும் தெரியாது. கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 15 நாட்களாக வருமானத்துக்கு வழியில்லாமல் தவிக்கிறோம். சாப்பாட்டுக்கூட வழியில்லாம அல்லாடி போயிருக்கோம். எங்க நிலைமை கொரோனா பாதித்தவர்களைவிட கொடூரமாக மாறிவிட்டது.
கரூர் மாவட்ட கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்தோம். போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அண்ணனைப் பார்த்து எங்களோட நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கோம். அவரும் எங்களுக்கு உதவுறதா சொல்லியிருக்கார். எங்களோட நிலைமை நாளுக்குநாள் மோசமாகிட்டே இருக்கு. கருணை உள்ளம் கொண்ட யாராச்சும் எங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் கொடுத்தா பட்டியில்லாம இருப்போம்’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
News & Photo Credits: Vikatan
