'கொரோனாவை இப்படித்தான் சிறப்பா விரட்டியடித்தோம்'... ‘இப்போ ஜெயிச்சிட்டோம்’... ‘நள்ளிரவு முதல் லாக் டவுனை தளர்த்தும் பெண் பிரதமர்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 27, 2020 08:05 PM

'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாங்கள் வென்றுவிட்டோம்' என, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

New Zealand has won the battle, claims \'elimination\' of coronavirus

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இங்கு 1,469 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானதோடு 19 பேர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் சமூக பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து 39 வயதே ஆன பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பேசுகையில், நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறிந்து, அதனை தடுத்துவிட்டதாகவும், இன்று புதிதாக ஒரேயொரு நோய்த்தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை என தெரிவித்தார். கொரோனா வைரஸ் இல்லா நிலையை நியூசிலாந்து அடைந்துவிட்டதாகக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், இதனால், நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில், இன்று நள்ளிரவு முதல் சில தளர்வுகள் கொண்டுவரவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொரோனா பரவத் துவங்கியதும், தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியதோடு, முழு ஊரடங்கை உடனடியாக அமல்படுத்தி, தொடர் நடவடிக்கைகளால் இன்று, தங்கள் நாட்டில் கொரோனா பரவலை முற்றிலும் தடுத்துவிட்டதாக கூறியுள்ள நியூசிலாந்து பிரதமரை, பல்வேறு நாட்டு தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கொரோனாவை சிறப்பாக கையாளுவதாக, ஜெர்மனி, ஃபின்லாந்து, பெல்ஜியம், ஐஸ்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து உள்ளிட்ட பெண் பிரதமர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.