'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 27, 2020 01:00 PM

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், மே 4-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

Italy to loosen lockdown from May 4 after 2 months

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்த நாட்டிலைக் காட்டிலும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் முதன்முதலில் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தத் தொடங்கியது. ஏனெனில், அங்கு சுவாசக் கோளாறு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் அதிகம் வசித்து வருவதால், அங்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி இடுகாடுகள் நிரம்பி வழிந்தன.

இதையடுத்து கடுமையான லாக் டவுன் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 18-ம் தேதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தநிலையில், தற்போது வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. 6 வாரங்களுக்குப்பிறகு, பலி எண்ணிக்கை மற்றும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வருவதால் மே 4-ம் தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார்.

கட்டுமானத்துறை, உற்பத்தி துறை மற்றும் மொத்த விற்பனையகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பார்கள், உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆனால் அங்கேயே அருந்த அனுமதி இல்லை. பார்சல் வாங்கி வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். அந்தந்த பிராந்தியங்களுக்குள் மக்கள் பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து பயணிக்கலாம். இறுதிச்சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆனால், அதிகபட்சம் 15 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் கூறி உள்ளார்.

இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 644 ஆக உள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா பாதிப்பு குறைவதால் லாக் டவுனை நீக்க முடிவு செய்துள்ளன.