‘மேலும் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி’... ‘எவையெல்லாம் செயல்படலாம்?’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது?’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 25, 2020 03:05 PM

ஊரடங்கு நேரத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் சில கடைகளைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதுகுறித்து இங்கே விரிவாக காணலாம்.

more shops allowed during lockdown what is open from today

நேற்றிரவு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சலூன்கள் மற்றும் டெய்லர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது வணிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், முதன் முறையாக அத்தியாவசிய, அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளும் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட தொடர்ந்து, தடை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், விதிமுறைகள் தளர்த்தி தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் (50 சதவீதம் மட்டுமே) ஊழியர்கள் முகக்கவசம், கையுறை, சமூக விலகல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடு தளர்வுகள் என்பது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசு முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதிகளில் இந்த தளர்வு பொருந்தாது.

இன்று முதல் எவையெல்லாம் மீண்டும் இயங்கலாம்:

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே செயல்படும் கடைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட அந்தந்த மாநில, யூனியன் பிரதேசத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள சந்தைகளில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்கலாம்.

கிராமப்புறங்களில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து கடைகளும், சந்தைகளும் திறக்கலாம். நகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தனித்து செயல்படும் கடைகளை மட்டும் திறக்கலாம்.

சலூன்கள் இயங்கலாம், ஆனால் அவை வணிக வளாகத்தில் இருந்தால் இயங்க அனுமதி இல்லை.

வணிக வளாகங்களில் அல்லாமல், தனி கட்டிடத்தில் செயல்படும் டெய்லர் கடைகளை திறக்கலாம்.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட சந்தைகளில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி

நகர்ப்புறங்களில், அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை குடியிருப்பு பகுதிகள் அல்லது தனி கட்டிடத்தில் இயங்கும் கடையாக இருக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்டவை தவிர்த்து, உள்ள மற்ற வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எவையெல்லாம் இயங்க அனுமதி கிடையாது:

மால்கள் மற்றும் திரையரங்குகள்

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மால்களில் உள்ள பல பிராண்ட் கொண்ட கடைகள் மற்றும் ஒரே பிராண்ட் கொண்ட கடைகள் இயங்க அனுமதி இல்லை.

சந்தை வளாகத்தில் உள்ள கடைகள், வளாகங்களில் உள்ள கடைகள், பல பிராண்ட்கள் கொண்ட கடைகள் இயங்க அனுமதி இல்லை.

உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் செயல்பட அனுமதி இல்லை.

மதுபானக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.

மால்களில் உள்ள துணிக்கடைகள் இயங்கவும் அனுமதி இல்லை.