‘கடைகள் மூடியிருந்தால் என்ன?’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’!
முகப்பு > செய்திகள் > வணிகம்கணினியில் சாஃப்ட்வேர் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு Remote Assistance வழங்கப்படும் என இரண்டு பிரபல நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ளதால், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் கணினியின் மூலம் வேலைப் பார்த்து வருகிறார்கள். இதனை நம்பியே வேலை செய்யும் பலருக்கும், கணினி அல்லது லேப்டாப்பில் பிரச்னை ஏற்பட்டாலும் வெளியில் சென்று சரி செய்ய முடியாத நிலையில் கடைகள் மூடப்பட்டுள்ளன. சில நிறுவனங்களில் தங்கள் பணியாளர்களுக்கு லேப்டாப்பில் பிரச்னை ஏற்பட்டால் அவர்களே அதைச் சரி செய்து கொடுக்கின்றனர். ஆனால் பலருக்கும் நிறுவனத்திலிருந்து அவ்வாறு வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், இந்தியாவில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கணினியில் சாஃப்ட்வேர் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு Remote Assistance வழங்கப்படும் என HP நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் எந்த நிறுவனத்தின் மடிக்கணினியாக இருந்தாலும் Remote Assistance வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளதுடன், தனிப்பட்ட பயனர்கள் மட்டுமல்லாது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கணினிகளில் பிரச்னை என்றாலும் இந்தச் சேவையைக் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது HP நிறுவனம்.
செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், இயங்குதளம், சாஃப்ட்வேர் கோளாறு மற்றும் நெட்வொர்க் பிரச்னைகள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் பிரச்னை அல்லது அது தொடர்பான உதவி தேவைப்பட்டால் HP நிறுவன உதவி மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கென தனிக்குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த சேவை மே மாதம் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
இதற்கு முன்னதாக, இதேபோல் லெனோவோ நிறுவனம் இச்லுகையை இலவசமாக மே 3-ம் தேதி வரை 24 மணிநேரமும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறியது. லெனோவா நிறுவனத்தின் கட்டணமில்லா எண் 1800 419 5253, HP நிறுவனத்தின் கட்டணமில்லா எண் 1800 258 7140 (வீட்டில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் கணினிகள் அல்லது மடிக்கணினிகளுக்கு) மற்றும் வியாபார நிறுவனத்தைச் சேர்ந்த கணினிகளுக்கு hpindiaservices@hp.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.