'ஒரே ஒரு துண்டு தான்!'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி?.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் சென்று வரும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு முடித்திருத்தகத்தில் முடி வெட்டச் சென்ற 6 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், பார்கோன் கிராமம் உள்ளது. இந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் நபர் தன்னுடைய சொந்த கிராமமான பார்போனுக்கு திரும்பியுள்ளார். அங்கு ஒரு முடிதிருத்தகத்திற்குச் சென்றுள்ளார்.
பின்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் அந்தக் கடைக்குச் சென்ற நாளில் அங்கு வந்த 12 நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்கோன் மாவட்டத்தில் தலைமை மருத்துவ அதிகாரி திவ்யேஷ் வர்மா கூறுகையில், "அந்த முடி திருத்தகத்திற்குச் சென்ற 12 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 6 பேரின் குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பார்கோன் கிராமமே மூடப்பட்டு உள்ளது" என்று கூறினார்.
அந்த முடிதிருத்தகத்தில் இருந்த முடிதிருத்துனருக்கு தொற்று இல்லை. முடித்திருத்தகத்தில் வந்த அனைவருக்கும் ஒரே துண்டையும் முடிவெட்டும் கருவிகளையும் பயன்படுத்தியதே தொற்று பரவியதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தூர் உணவகத்தில் பணிபுரிந்த நபரின் மூலமே மற்றவர்களுக்கு தொற்று பரவியுள்ளது. தற்பொழுது தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரின் வயது 28 முதல் 73 வரையாகும்.
தற்பொழுது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24, 942. தொற்றில் இருந்து மீண்டவர்கள் 5, 210. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 779 ஆகும்.
