‘காது வலினு போன இளைஞர்’.. ‘குட்டிபோட்டு குடியிருந்த பூச்சி’!.. மிரண்டுபோன டாக்டர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Nov 07, 2019 05:49 PM
இளைஞர் ஒருவரின் காதில் கரப்பான் பூச்சி குட்டிப்போட்டு குடியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா குவாண்டாங் மாநிலத்தில் உள்ள ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லிவ் (24). இவரின் காதுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்துள்ளது. அதனால் தனது குடும்பத்தினரிடம் காதுக்குள் எதாவது இருக்கிறதா என பார்க்க சொல்லியுள்ளார். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேரம் செல்ல செல்ல இளைஞருக்கு காது வலி அதிகமாகியுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த மருத்துவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளிட்டு இருந்துள்ளது. இதனால் உடனடியாக சிறப்பு கருவிகள் கொண்டு ஒவ்வொரு கரப்பான்பூச்சியாக எடுத்துள்ளனர்.
ஆனால் தாய் கரப்பான் பூச்சியை அகற்றுவதில் மருத்துவர்களுக்கு பெரும் சிரமம் இருந்துள்ளது. இதனால் களிம்பு கொண்டு காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் தாய் கரப்பான்பூச்சியை அகற்றியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் ஒருவர், ‘லீவ் தினமும் சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைத்துள்ளார். அதனால் உணவை சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் காதுக்குள் சென்றிருக்கிறது. எத்தனை நாட்களாக கரப்பான் பூச்சி காதில் இருந்தது என தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பெண்ணின் காதில் 9 நாட்களாக இருந்த கரப்பான் பூச்சியை அகற்றியது குறிப்பிடத்தக்கது.