உலகின் மிகவும் காரமான மிளகாய்.. மனுஷன் அதேயே அசால்ட் செஞ்சிருக்காரே.. கின்னஸ் அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க.. !
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகவும் காரமான மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர்.
காரம்
காரமான உணவுகள் பலருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது. உணவுகளுக்கு காரம் சேர்க்க மிளகாய்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிலும் பல வகை மிளகாய்கள் சந்தையில் இருக்கின்றன. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு அளவிலான காரம் கொண்டவை. ஆனால் இதில் ஜாம்பவான் வகை ஒன்று இருக்கிறது.
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் விளைவிக்கப்படும் புட் ஜோலோகியா (bhut jolokia) உலகின் மிகவும் காரமான மிளகாய்களுள் ஒன்றாகும். இது கேப்சிகம் சினன்ஸ் மற்றும் கேப்சிகம் ஃப்ரூட்சென்ஸ் ஆகியவற்றின் கலப்பினமாகும். கடந்த 2007 ஆம் ஆண்டு கின்னஸ் நிர்வாகம் இந்த மிளகாயை உலகின் மிகவும் காரமான மிளகாயாக அறிவித்திருந்தது. அதன்பிறகு 2011 இல் டிரினிடாட் ஸ்கார்பியன் புட்ச் டி மிளகாயும் 2013 இல் கரோலினா ரீப்பர் மிளகாயும் முதலிடம் பிடித்தன.
கின்னஸ் சாதனை
இருப்பினும், இந்தியாவில் விளைவிக்கப்படும் புட் ஜோலோகியா மிளகாயை உண்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. பொதுவாக மிளகாயின் காரத்தன்மையை Scoville Heat Units மூலம் அளவிடுகிறார்கள். இந்த புட் ஜோலோகியா மிளகாயில் ஒரு மில்லியன் Scoville Heat Units காரம் உள்ளது. ஆனால், இதனையே அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் அசால்ட் செய்திருக்கிறார். அவருக்கு கின்னஸ் நிர்வாகம் சான்றளித்து கவுரவப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கிரிகோரி ஃபாஸ்டர். இயல்பாகவே இவருக்கு காரம் என்றால் பிடிக்குமாம். அதனாலேயே இந்த சாதனையை இவர் செய்ய முடிவெடுத்திருக்கிறார். இவர் ஒரு நிமிடத்தில் 17 புட் ஜோலோகியா மிளகாயை சாப்பிட்டு உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
கிரிகோரி ஃபோஸ்டர் முன்னதாக ஆறு கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு முடித்ததற்காக உலக சாதனை படைத்திருந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டில் மிக வேகமாக மூன்று மிளகாய்களை சாப்பிட்டதற்கான உலக சாதனையையும் அவர் முறியடித்தார்.