மனைவிக்கு தெரியாம இரண்டாவது கல்யாணம் செஞ்ச நபர்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.. நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை தட்டிக்கேட்ட முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது புதுகை நீதிமன்றம்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த விட்டாநிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதி. 45 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ஆகவே, மதி வேறு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த விஷயம் மதியின் முதல் மனைவிக்கு தெரியவந்திருக்கிறது.
இதனால் இருவருக்குள்ளும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி மதிக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் மதி தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவருடைய மனைவி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் ஆகஸ்டு 1 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாக்குமூலம்
இதனிடையே, மதியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கின்றனர். அப்போது, மதியின் மனைவி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவர் தன்னை தாக்கியதாக அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், காவல்துறையினர் மதியை கைது செய்தனர். மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவர் மீதான வழக்கு புதுகை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி. இந்த வழக்கில் மதி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
இரண்டாவது திருமணம் பற்றி தட்டிக்கேட்ட முதல் மனைவியை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருப்பது அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.